கறி விருந்தில் தகராறு: நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கறி விருந்தில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே கிளிப்பி கிராமத்தை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 41). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி தனது நண்பர்களுக்கு கறி விருந்து வைத்தார்.
அதற்கு மர லோடு ஏற்றி கூலி வேலை செய்து வரும் நண்பரான சாமி என்பவரை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாமி மது போதையில் விருந்து நடைபெற்ற இடத்திற்கு சென்று உன்னிகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் உன்னிகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார். அப்போது எதிரே நடந்து வந்தபோது உன்னிகிருஷ்ணனிடம் சாமி தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் உன்னிகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி அருணாசலம் தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து போலீசார் சாமியை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார்.