திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - நீதிபதிகள் பேச்சு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீதிபதிகள் பேசினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளை விரைவில் முடிப்பது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. முதன்மை நீதிபதி ஆனந்தன், கலெக்டர் சிவன் அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உள்பட மாஜிஸ்திரேட்டுகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நீதிபதிகள் பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 10,098 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது உள்ளிட்ட 14 ஆயிரம் வழக்குகளும் உள்ளது. இந்த வழக்குகளை விரைவில் முடிக்க காவல்துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
மணல் கடத்தல், ஆள் கடத்தல், திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்து காவல் நிலையங்களிலும், கோர்ட்டு வளாகங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மழையில் நனைந்து வீணாகிறது. அந்த வழக்குகளை முடிக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்நிலையம் அல்லாத சமரசம் வழக்குகளை வெளியில் பேசி முடிவெடுத்து சமரசம் பேசி அந்த வழக்குகளையும் முடிக்க காவல்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும். போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வழக்குகளுக்கு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் பேசினர்.
கூட்டத்தில் மாஜிஸ்திரேட்டுகள் அருண்சங்கர், ரம்யா, பத்மாவதி, காளிமுத்து, கனிமொழி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.