கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்கம் பணி: 129 ஆண்டுகள் பழமையான ஆற்று பாலம் இடித்து அகற்றம்

கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்க பணிக்காக 129 ஆண்டுகள் பழமையான ஆற்று பாலத்தை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-17 16:20 GMT
கடலூர் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள பாலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
கடலூர்-புதுச்சேரி மாநிலத்தை பிரிக்கும் வகையில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆறு கடலூர் அருகே வங்க கடலில் கலந்து வருகிறது. இதில் கடலூர்-புதுச்சேரி போக்குவரத்து வசதிக்காக ஆல்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரும்பிலான பாலம் கட்டப்பட்டது. அதாவாது 1,888 ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 1891-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்பின்னர் தற்போதைய காலக்கட்டத்தில் வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக, இந்த குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அதனருகிலேயே புதிதாக பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், பழைய இரும்பு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதில் செடிகொடிகள் படர்ந்து புதர் மண்டி காட்சி அளித்தது. பெரும் வெள்ளம், புயல் என இயற்கை இடர்கள் பலவற்றை தாங்கி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கம்பீரமாக காட்சி தந்தது இந்த பாலம்.

தற்போது வளர்ந்து வரும் இன்றைய உலகில் பெருகி வரும் வாகன போக்குவரத்துக்கென புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் கடலூர்-புதுச்சேரி சாலை விரிவாக்கம் பணியை கையில் எடுத்து உள்ளது தேசிய நெடுஞ்சாலைத்துறை. இதில் முதற்கட்டமாக கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்காணங்குப்பம் பகுதியில் இருந்த சிறிய பாலம் தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த படியாக ஆல்பேட்டை பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள ஆங்கிலேயர் காலத்து பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பழைய பாலத்தை இடிக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று தொடங்கினர். பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது. தலைமுறைகள் பல கடந்து வரலாற்று சின்னமாக இருந்த பாலம் இடிப்பது பற்றி அறிந்த பொதுமக்கள் பலர் அங்கு திரண்டு வந்து பார்வையிட்டனர். மேலும் பலர் தங்களது செல்போனில் படம் பிடித்தும் சென்றதை பார்க்க முடிந்தது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து தற்போது இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பழைய பாலத்தை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், கட்டுமான பணிகள் தொடங்கும். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்