தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம்
மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் பகுதி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் நடைபெற்றது.
எலச்சிப்பாளையம்,
திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படும் விவசாய மற்றும் நெசவு கூலித்தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமும் நடத்தப்பட்ட நிலையில், பேச்சு வார்த்தையின் போது, புறம்போக்கு இடம் இல்லை என அதிகாரிகள் கூறியதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளில் உள்ள புறம்போக்கு இடங்களை மீட்டு தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் மணிவேல் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதையொட்டி திருச்செங்கோடு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.