மத்தூர் அருகே, தீயில் கருகி மூதாட்டி சாவு
மத்தூர் அருகே தீயில் கருகி மூதாட்டி பலியானார்.
மத்தூர்,
மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 80). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கோவிந்தம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மூதாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மண்எண்ணெய் விளக்கு தவறி விழுந்து மூதாட்டி மீது பிடித்து கொண்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து மூதாட்டியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தீ வீட்டில் மளமளவென பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் வீடும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.