ஆற்காடு அருகே ராணுவத்தில் சேர போலி பணியாணை வழங்கிய 2 பேர் பிடிபட்டனர்; போலீஸ் விசாரணை
ஆற்காடு பகுதியில் பணம் பெற்றுக்கொண்டு ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு போலி பணியாணை வழங்கிய 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி பணியாணை
ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவர் ராணுவத்தில் வேலை பார்த்து நீக்கம் செய்யப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவரது நண்பர் அண்ணாமலை (48).
இவர்கள் இருவரும் சேர்ந்து இளைஞர்களை ராணுவத்தில் சேர்ப்பதாகக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். அதேபோல் ஆரணியை சேர்ந்த 3 நபர்களிடம் தலா ரூ.2 லட்சமும், ஆற்காட்டை அடுத்த கலர் கிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களிடம் தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பணியாணையும் வழங்கி உள்ளனர். இந்த பணியாணையை நாசிக்கில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் கொடுத்தபோது அவை போலியானது என்பது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று சுரேஷ் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் ஆற்காட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தனர்.
2 பேர் பிடிபட்டனர்
அப்போது இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த கலர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், அவர்களை கலர் கிராமத்திற்கு அழைத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாசில்தார் காமாட்சி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ் மற்றும் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் சுரேஷ் ராணுவத்தில் வேலை செய்து பணிநீக்கம் செய்யப்பட்டது
தெரியவந்தது
மேலும் அவர்கள் இருவரும், இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான போலி ஆணைகளை கொடுத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆற்காடு தாலுகா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.