பொங்கலூரில் மளிகை கடையில் திருடியவர் கைது
பொங்கலூரில் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கலூர்,
பொங்கலூர் தேவணம்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தரை தளத்தில் கடையும், முதல் தளத்தில் வீடும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு தேவராஜ் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு மாடியில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு மேஜை டிராயரில் இருந்த ரூ. 50 ஆயிரம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவை ஆய்வு செய்தனர்.
கைது
அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடையில் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவினாசிபாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் திருப்பூர் செவந்தாம்பாளையத்தை சேர்ந்த தனசேகரன் (வயது34) என்பது தெரியவந்தது. இவர் பொங்கலூரில் உள்ள மளிகை கடையில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனசேகரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தாராபுரத்தில் உள்ள சிறையில் அடைத்தனர்.