குமரியில் திருட்டு போன 115 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு வழங்கினார்
குமரி மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.14 லட்சம் மதிப்புள்ள 115 செல்போன்களை போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த திருட்டு தொடர்பாகவும், தவறிய செல்போன்கள் குறித்தும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி, திருட்டுப்போன செல்போன்களை மீட்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் தலைமையில் ஏட்டுகள் டேவிட் துரைசிங், மணிகண்டபிரபு, போலீசார் அஜிஸ், வரதராஜன் ஆகியோர் அடங்கிய இணைய குற்றப்பிரிவு அமைக்கப்பட்டது.
டி.ஐ.ஜி. ஒப்படைத்தார்
இந்த போலீசாரால் சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 115 விலை உயர்ந்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமாக இருந்த குமரி மாவட்ட இணைய குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்சீர் உள்ளிட்ட 5 பேரையும் டி.ஐ.ஜி. பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
115 செல்போன்கள்
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறும்போது, குமரி மாவட்ட இணைய குற்றப்பிரிவு அமைக்கப்பட்ட பிறகு கடந்த மாதம் 65 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து தற்போது ரூ.14 லட்சம் மதிப்புள்ள 115 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் செயல்படும் தனிப்பிரிவு மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். இன்று (வியாழக்கிழமை) காலை நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாமில் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.