மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சினையில் இருதரப்பினர் மோதல் 5 பேர் காயம்; 8 பேர் மீது வழக்கு
சொத்து பிரச்சினையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் 5 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் சரல் விளையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவரும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி இந்திராவும் (45) உறவினர்கள். அவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இருதரப்பு உறவினர்களும் மோதிக்கொண்டனர். அப்போது அவர்கள் கைகளாலும், உருட்டு கட்டைகளாலும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.
5 பேர் காயம்
இந்த மோதலில் சதீஷ்குமார் தரப்பில் அவர், அவருடைய மகள் ஷர்மி, மாமியார் எமிலி ஆகியோர் காயமடைந்தனர். மற்றொரு தரப்பில் இந்திரா, அவருடைய மகன் விபிஷ் ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் மார்த்தாண்டம் போலீசில் தனித்தனியாக புகார் மனு கொடுத்துள்ளனர்.
சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் இந்திரா, அவருடைய மகன்கள் அபிஷேக், அகிலேஷ் மற்றும் சுகந்தி, அவருடைய மகன் விபிஷ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சதீஷ்குமார், அவருடைய மனைவி பிந்துகலா மற்றும் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.