ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கக்கோரி தஞ்சையில், கார் டிரைவர்கள் வேலை நிறுத்தம்
தஞ்சையில் ஓலா கார் டிரைவர்கள் ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சைமாநகரில் 90 ஓலா கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டுள்ள டிரைவர்கள், வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்யும் தொகையில் 27 சதவீதத்தை ஓலா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். இதில் டிரைவர்களுக்கு தங்களது திறமைகளின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த ஊக்கத்தொகை வழங்குவதை ஓலா நிறுவனம் நிறுத்திவிட்டது.
இதனை தொடர்ந்து வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டிரைவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஆதார வருமானத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் தங்களுக்கு தஞ்சையில் அலுவலகம் அமைத்து தர வேண்டும். தொழில்நுட்ப குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தம்
போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் நேற்று தஞ்சை அரசு தொழிற்பயிற்சி மைதானத்தில் அனைத்து கார்களையும் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஓட்டுனர்கள் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேறும் வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.