கோடியக்கரை சரணாலயத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வந்த வரித்தலை வாத்துகள்
கோடியக்கரை சரணாலயத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான், ஈராக் நாட்டில் இருந்து வரித்தலை வாத்துகள் வந்தன. இந்த பறவைகள் ஒரு மணி நேரத்தில் 160 கி.மீ. வேகத்தில் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் 247 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இதில் 50 வகையான பறவைகள் நிலப்பறவைகள் ஆகும். 200-க்கும் மேற்பட்டவை நீர் பறவைகள் ஆகும்.
வரித்தலை வாத்துகள்
உலகின் மிக உயரத்தில் பறக்கக்கூடிய பறவையினங்களுள் ஒன்றான இந்த வரித்தலை வாத்துகள் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வந்து செல்லும். இந்தநிலையில் கஜா புயல் காரணமாக கோடியக்கரை பகுதிக்கு வாராமல் இருந்த வரித்தலை வாத்துகள், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து உள்ளன.
160 கி.மீ. வேகம்
மிக அதிக உயரத்தில் 24மணி நேரத்தில் அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் இந்த பறவைகள் பறக்கும் திறன் கொண்டவை என பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
புல் பூண்டுகளை உணவாக உட்கொள்ளும் இந்த வரித்தலை வாத்துகள் மத்திய ஆசிய நாடுகளான மங்கோலியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், திபெத், இந்தியாவின் லடாக் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆண்டுதோறும்
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு குளிர் காலத்தில் வரும் இந்தப் பறவைகள் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு தங்கி ஹிமாலயன் மலைப்பகுதிக்கு சென்றுவிடும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு.....
சாம்பல் வெள்ளை நிறம் கலந்த நிறம் கொண்ட இந்த பறவைகள் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சி அளிக்கும்.
மற்ற பறவைகளை ஒப்பிடும் பொழுது இந்த வரித்தலை வாத்துகள் அதிகளவில் ஆக்சிஜனை உட்கொள்ளும் திறன் கொண்டமையால், நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டது என தஞ்சை சரக வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த வரித்தலை வாத்துகள் கஜா புயல் தாக்கத்துக்கு பின் 3 ஆண்டுகளுக்கு பிறகு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திறப்பு
இந்த பறவைகளை அதிகாலை 6 மணி முதல் காலை 9 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் நண்டு பள்ளம், முனியப்பன் ஏரி, காலவாய்க்கரை, சோழா கலங்கரை விளக்கம் பகுதி, சவுக்கு பிளட்டு, அலைவாரிப்பகுதிகளில் அதிகமாக சுற்றுத்திரிகின்றன. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அடுத்த வாரம் திறக்கப்படும். சரணாலயம் திறந்த உடன் இந்த பறவைகளை பார்த்து ரசிக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.