திருவாரூர் மாவட்டத்தில் மழையால் 90 ஆயிரத்து 623 எக்டேர் பயிர்கள் பாதிப்பு அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் இதுவரை 90 ஆயிரத்து 623 எக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-12-17 02:35 GMT
நன்னிலம், 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அன்னதானபுரம் பகுதியில் முதல்- அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற தமிழக முதல்- அமைச்சர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் ் 2ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார். இதன் அடிப்படையில் அன்னதானபுரம் பகுதியில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்- அமைச்சர் மக்கள் நலன் காக்கும் முதல்- அமைச்சராக எப்போதும் செயல்படுவார். இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

கால்நடை மருந்தகம்

தொடர்ந்து அமைச்சர் காமராஜ் குருங்குளம் பகுதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், துணை இயக்குனர் கீதா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவரும் ஒன்றியக்குழு துணை தலைவருமான சி.பி.ஜி.அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர் விஜயலெட்சுமி, கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், ராமகுணசேகரன், முன்னாள் ஒன்றியக்குழுதலைவர் சம்பத், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், கல்வி புரவலர் ஜெயராமன், கூட்டுறவு சங்க ்தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன் கிரிஜா, பழனிவேல், ஊராட்சி துணைத் தலைவர்கள் முத்துக்குமார், மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

இதைப்போல திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 162 பேருக்கு ரூ.42 லட்சத்து 79 ஆயிரத்து 709 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பயிர்கள் பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 5, 328 பேருக்கு ரூ.13 கோடியே 32 லட்சம் மதிப்பில் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கனமழையினால் இதுவரை 90 ஆயிரத்து 623 எக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தோட்டக்கலைத்துறை பயிர் 65 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்பாட்டில் ஒரு அங்கம் தான் பயோ மெட்ரிக் முறையில் உணவு பொருட்களை வழங்குவது ஆகும். அதனை காலத்தில் செய்து தான் ஆக வேண்டும். பொதுமக்கள் ரேசன் பொருட்களை பெறுவதில் பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்தினாலும் எந்த பிரச்சினையும் இருக்காது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்