கோவில் விழாவின் போது தகராறு: படுகாயமடைந்த வாலிபர் சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவில் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்த வழக்கை கொலைவழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2020-12-17 01:26 GMT
கொள்ளிடம் டோல்கேட், 

திருச்சி உத்தமர்சீலி அருகே உள்ள கிளக்கூடு கிராமத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. அப்போது, விழாவில் முதல் மரியாதை கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 35), கண்ணன் (27) மற்றும் லோகநாதன் (35) ஆகியோரை அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (55), அவருடைய மகன் ஆனந்த் (30), வேலு (30), பிரகாஷ் (20) ஆகிய 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

கொலை வழக்காக மாற்றம்

இதில் படுகாயமடைந்த அசோக்குமார், கண்ணன் உள்ளிட்ட 3 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்