திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் 4 பயணிகள் கைது

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-12-17 01:22 GMT
செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வருபவர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை கடத்தி வருவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக கடந்த 7-ந்தேதி துபாயில் இருந்து வந்த 6 பேரிடம் நடத்திய சோதனையில் 8½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 5.15 மணிக்கு துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது.

3 கிலோ தங்கம் பறிமுதல்

இந்த விமானத்தில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த ரகுமான் பாஷா மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கந்தசாமி உள்ளிட்ட 4 பயணிகளிடமிருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் நேற்று 7.15 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த மதுரையைச் சேர்ந்த நல்லான், காரியாபட்டியை சேர்ந்த மணிமாறன், அரியலூரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய பயணிகள் தங்கள் உடலில் பசை வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மொத்தத்தில் அவர்களிடம் இருந்து 3 கிலோ 28 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 52 லட்சத்து 8 ஆயிரத்து 720 ஆகும். பிடிபட்ட 7 பயணிகளில் 4 பேரை கைது செய்த அதிகாரிகள் மற்றவர்களிடம் ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்