காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு தடை - மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உத்தரவு

காஞ்சூர்மார்க்கில் மெட்ரோ ரெயில் பணிமனைக்காக கலெக்டர் நிலம் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்த மும்பை ஐகோர்ட்டு, அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதித்தது.

Update: 2020-12-16 23:57 GMT
மும்பை, 

மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மும்பையில் கொலபா-பாந்திரா- சீப்ஸ் இடையேயான மெட்ரோ ரெயில் சேவைக்காக ஆரேகாலனியில் பணிமனை அமைக்க தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்திற்காக பசுமை நிறைந்த ஆரேகாலனியில் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதற்கு சமூக ஆர்வலர்களும், அப்போதைய கூட்டணி கட்சியான சிவசேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தநிலையில் கடந்த ஆண்டு சிவசேனா தலைமையில் மகாவிகாஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டதும் ஆரேகாலனியில் நடைபெற இருந்த மெட்ரோ ரெயில் பணிமனை பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ ரெயில் நிலையம் காஞ்சூர்மார்க் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதற்காக கடந்த அக்டோபர் 1-ந் தேதி காஞ்சூர்மார்க்கில் 102 ஏக்கர் நிலத்தை எம்.எம்.ஆர்.டி.ஏ.வுக்கு மாற்றி மும்பை புறகர் கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கைக்கு மராட்டிய பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன.

இந்தநிலையில் காஞ்சூர்மார்க்கில் ஒதுக்கப்பட்ட 102 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் உப்புத்துறை உரிமை கோரியது. மேலும் உப்புத்துறை மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அது உப்பு சார்ந்த நிலம் என்றும், அது தங்களது துறைக்கு சொந்தமானது என்பதால், நிலம் ஒதுக்கிய கலெக்டரின் உத்தரவை ரத்து செய்வதோடு, அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியது.

இந்த மனு தலைமை நீதிபதி தீபன்கர் தத்தா, நீதிபதி குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது காஞ்சூர் மார்க்கில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று விசாணையின் போது, காஞ்சூர் மார்க்கில் நிலம் ஒதுக்கி கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, அங்கு கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இறுதிகட்ட விசாரணை பிப்ரவரியில் நடைபெறும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவு மகா விகாஸ் அகாடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஜித் பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆரேகாலனியில் இருந்து கஞ்சூர்மார்க் பகுதிக்கு பணிமனையை மாற்றும் மகா விகாஸ் அகாடி அரசின் திட்டம் பலரை காயப்படுத்தி உள்ளது என்று தோன்றுகிறது. இதனால் மத்திய அரசு இப்படி ஒரு தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரசியலமைப்பு மற்றும் சட்டத்தில் ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக அனுமதி உள்ளது. எனவே இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.

நான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் 50 முதல் 55 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை பார்த்திருக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக நான் அரசியலிலும் இருக்கிறேன். ஆனால் இதுவரை வளர்ச்சி பணிகளில் நான் ஒருபோதும் அரசியலை கொண்டுவந்ததில்லை. மாறாக நாங்கள் இதுபோன்ற பணிகளுக்கு உதவி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஐகோர்ட்டு இந்த திட்டத்திற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் மேற்கொண்டு என்ன செய்வது என தீர்மானிக்க கோர்ட்டின் விரிவான எழுத்துப்பூர்வ உத்தரவுக்கு நாங்கள் காத்திருக்கிறோம். மெட்ரோ ரெயில் பணிமனை திட்டத்திற்கு இந்த நிலம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கிட்டத்தட்ட ரூ.5 ஆயிரத்து 500 கோடி அரசு பணத்தை மிச்சப்படுத்தும்“ என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்