செந்துறையில் அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை கொரோனா தொற்றால் தெப்பத்திருவிழா ரத்து

செந்துறையில் உள்ள அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது.

Update: 2020-12-16 23:23 GMT
செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள சித்தேரி கரையில் பழமை வாய்ந்த அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ந் தேதி முதல் செந்துறை சுற்றுவட்டார பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து அய்யப்பனை தரிசிப்பார்கள். மேலும் தினமும் மாலை நேரங்களில் பஜனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

மார்கழி 1-ந் தேதி அன்று அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து, படி அலங்கார பூஜைகளும் நடைபெறும். பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் அய்யப்பன், பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதையடுத்து கன்னி பூஜையும், அன்னதானமும் நடைபெறும். பின்னர் அய்யப்ப சுவாமி வீதி உலா நடைபெற்று, சித்தேரியில் தெப்பத்திருவிழா நடைபெறும். இதில் அலங்கரிக்கப்பட்ட சிறு தேரில் அய்யப்பனை வைத்து, சித்தேரியில் 3 நாட்கள் மிதக்கவிட்டு பொதுமக்கள் வழிபடுவார்கள். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

களையிழந்தது

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, சித்தேரி கரையில் உள்ள அய்யப்பன் கோவிலில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் மாலை அணிந்தனர். நேற்று கோவிலில் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும், படி அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதைத்தொடர்ந்து கன்னி பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டதால், அப்பகுதி களையிழந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்