பெங்களூருவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவிப்பு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெங்களூரு மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்பட வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். குறிப்பாக எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு பகுதிகளில் விடிய, விடிய பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் சர்ச் தெருவில் குண்டு வெடித்தது, இதில் சென்னையை சேர்ந்த பெண் பலியானார். அதைதொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளம்பெண்களுக்கு, சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதனால் பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு, சர்ச் தெரு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட நள்ளிரவு 12 மணி முதல் 12.05 மணி வரை 5 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தற்போது பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் உள்ளது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோட்டில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் கூடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை. குறிப்பாக எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடுகளில் மக்கள் அதிகளவு திரண்டு புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், வழிகாட்டு விதிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
அதே நேரத்தில் பெங்களூரு நகரில் உள்ள ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பப்புகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை போலீசார் கண்காணிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.