வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் கைது
வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்காக திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் அருகே விவசாயிகள் திரண்டனர். பின்னர் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு சாலையோரத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பினர் பாண்டி, விவசாய சங்க நிர்வாகி பெருமாள் மற்றும் விவசாயிகள் என மொத்தம் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோக்கஸ்வளவன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் அன்பரசு, மைதீன்பாவா, சந்திரன், ரமேஷ், ஆற்றலரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.