நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் நீர் கசிவு - மணல்மூட்டை வைத்து சரிசெய்யப்பட்டது
நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் நீர் கசிவை சுமார் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் கசிவதை தடுத்து நிறுத்தினர்.
நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் வழிந்தோடும் தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்ட பழுது வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளதையும், நீர் கசிவை கட்டுப்படுத்த மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.
நெல்லூர்பேட்டை பெரிய ஏரி 2 இடங்களில் நிரம்பி வழிகிறது. ஒன்று குடியாத்தம்- பேரணாம்பட்டு செல்லும் சாலை பகுதியிலும், மற்றொன்று செட்டிகுப்பம் பகுதியில் வழிந்தோடுகிறது. நேற்று மாலை குடியாத்தம்-நெல்லூர்பேட்டை பகுதியில் கரையின் நடுவே தண்ணீர் வெளியேறி கற்களை தள்ளிக்கொண்டு வந்தது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, ஹேமலதா, நகராட்சி ஆணையாளர் நித்யானந்தன், உள்ளிட்டோர் விரைந்து சென்று பார்த்தனர். பின்னர் மோர்தானா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் கரையின் மற்றொரு பகுதியான செட்டிகுப்பம் பகுதியில் வழிந்தோடும் பகுதியில் தண்ணீரை அதிகளவு வெளியேற்றினர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் சுமார் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் கசிவதை தடுத்து நிறுத்தினர்.