தஞ்சையில் 2-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் போலீசார் குவிப்பு
தஞ்சையில் 2-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடந்த இடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடைபெற்ற இடத்தில் பந்தல் அமைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் வெட்ட வெளியில் நாற்காலி போட்டு அதில் அமர்ந்தனர்.
தஞ்சாவூர்,
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் விவசாயிகள், பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு போராட்டக்குழு நிர்வாகிகள் கண்ணன், வீரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் பாலசுந்தரம், செந்தில்குமார், காளியப்பன், அயனாவரம் முருகேசன், திருநாவுக்கரசு, பழனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரும்ப பெற வேண்டும்
போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் துரைமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
போராட்டத்தில் ம.தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஆடுதுறை முருகன், தெற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், பாபநாசம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைச்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாபுதீன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சின்னத்துரை, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ஜீவக்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
போலீசார் குவிப்பு
விவசாயிகள் போராட்டத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் போராட்டம் நடைபெற்ற இடத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் சுற்றி அரண்போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக போராட்டம் நடைபெற்ற இடத்தில் பந்தல் அமைக்க போராட்டக்குழுவினர் ஏற்பாடுகள் செய்தனர். அதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்து பந்தல் அமைக்கக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக்குழுவினர் வெட்ட வெளியில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.