வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூரில், ம.தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடலூரில் நேற்று ம.தி.மு.க.வினருடன் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியினரையும் அழைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போலீஸ் குவிப்பு
இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் மஞ்சக்குப்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து காலை 10.30 மணி அளவில் ம.தி.மு.க.வினர் கரும்பு மற்றும் விவசாய பயிர்களுடன் கடலூர் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், சிவக்குமார், எஸ்.கே.வெங்கடேசன், அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், ஜெய்சங்கர், செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் வந்தியதேவன் விளக்க உரையாற்றினார்.
கண்டன உரை
சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மணிவாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு தலைவர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் கமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் ராஜாராமன், எம்.எல்.எப். தொழிற்சங்கம் மணிமாறன், மாவட்ட அவைத்தலைவர் சட்டநாதன், துணை செயலாளர் திராவிட அரசு, மாவட்ட பொருளாளர் மதன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ராசாஎழிலன், பொதுக்குழு உறுப்பினர் பரமமூர்த்தி, பண்ருட்டி நகர செயலாளர் ரமேஷ், வடலூர் பேரூர் செயலாளர் சிவஞானம், கடலூர் நிர்வாகிகள் வெங்கட் தங்கம், மணிகண்டன், தமிழ்ச்செல்வன், கடலூர் ஒன்றிய துணை செயலாளர் ஆபீஸ் குமார், கடலூர் மாவட்ட இளைஞரணி கிழக்கு மேற்கு அமைப்பாளர்கள் சாஞ்சி ஜே.சிவராமன், வயலாமூர் பா.ராஜ், மாணவரணி அமைப்பாளர் ஆதித்தா, பின்னலூர் வெற்றி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர். முடிவில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கட் நாராயணன் நன்றி கூறினார்.