வக்கீலுக்கு சரமாரி அரிவாள் வெட்டு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
திருச்சியில் பட்டப்பகலில் வக்கீலுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை பக்கம் உள்ள அல்லித்துறையை சேர்ந்தவர் கணேசன் மகன் சந்தர் (வயது 35). இவர் திருச்சி கோர்ட்டில் வக்கீல் ஆக பணியாற்றி வருகிறார். வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் என்ற கட்சியின் மாநில அமைப்பாளராகவும் உள்ளார். நேற்று மாலை 4 மணி அளவில் இவர் திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு குறுக்கு தெருவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் சந்தரின் தலை, வயிறு, தோள்பட்டை ஆகிய இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.
தப்பி ஓட்டம்
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ரத்த காயத்துடன் சந்தர் அலறியபடி மெயின்ேராட்டிற்கு ஓடி வந்தார். அந்த பகுதியில் நின்றவர்கள் அரிவாளால் வெட்டியவர்களை பிடிக்க முயன்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் ஒரு காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பின்னர், அக்கம்பக்கத்தினர் சந்தரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தில்லைநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், மருத்துவமனைக்கு சென்று சந்தரிடமும் விசாரணை நடத்தினார்கள்.
சாலை மறியல்
அப்போது, அவரை வெட்டியது யார்?, எதற்காக வெட்டினார்கள்? என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் சந்தரை அரிவாளால் வெட்டியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே வக்கீலை வெட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி அவருடைய உறவினர்கள் மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் தென்னூர் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் அவர்களை சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.