கிண்டியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து டீ கடைக்காரர் பலி
கிண்டியில் டீ கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கடையின் உரிமையாளர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
ஆலந்தூர்,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர், சென்னை கிண்டி மசூதி காலனியில் தங்கி, அதே பகுதியில் டீ கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மோகன் வழக்கம்போல் கடையை திறந்தார்.
பின்னர் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கடை முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. இதை அறியாமல் மோகன், அடுப்பை பற்ற வைத்தபோது, கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததுடன், கடையில் இருந்த பொருட்கள் சிதறி சாலையில் வந்து விழுந்தது. மேலும் சிலிண்டர் வெடித்தபோது கடையில் இருந்த மோகன் தூக்கி வீசப்பட்டார். அவரது உடலிலும் தீப்பிடித்து கொண்டது.
அவர் உடலில் எரியும் தீயுடன் கடையில் இருந்து வெளியே ஓடி வந்தார். தன்னை காப்பாற்றும்படிகூச்சலிட்டார். ஆனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், இதனை வேடிக்கை பார்த்தபடி சென்று விட்டார்.
வலியால் அலறியபடி மோகன் சாலையில் அங்கும், இங்குமாக ஓடினார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மோகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயில் கருகி கிடந்த மோகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.