117 வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் குளறுபடி; ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. புகார்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தி.மு.க.. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் தி.மு.க. கட்சியினர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 2019-ம் ஆண்டுகளில் வழங்கப்படாமல் இருந்த பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி பலமுறை தி.மு.க. சார்பிலும் விவசாய சங்கம் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பல கிராமங்களில் பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாழ்ந்து வரும் விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகையில் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகள் பெற்ற கடன் தொகையை பிடித்தம் செய்வது கண்டனத்துக்கு உரியது. மேலும் ஒரே சர்வே எண்ணில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஒருவருக்கு ரூ.22 ஆயிரம், மற்றொரு விவசாயிக்கு பல மடங்கு குறைவாக ரூ. 5000 வழங்கப்பட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. மேலும் நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வேறுபட்ட பிரீமிய தொகை காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனம் நிர்ணயம் செய்து உள்ளது. இது பற்றி உரிய விசாரணை செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 117 வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் மாவட்ட தி.மு.க.. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. உடன் மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, மண்டபம் தி.மு.க. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், திருவாடானை ஒன்றிய செயலாளர்கள் சரவணன், ரவி, ஒன்றிய குழு தலைவர்கள் திருவாடானை முகம்மது முக்தார், ஆர்.எஸ்.மங்கலம் ராதிகா பிரபு, கமுதி தமிழ்செல்வி போஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் திருவாடானை மனோகரன் உள்ளிட்டவர்கள் சென்றனர்.