20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
தமிழகத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடந்தது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கோபால் தலைமையில் மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர். முன்னதாக 20 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பா.ம.க.வினர் கோஷமிட்டபடி சென்றனர். இதேபோல் மாநில துணை செயலாளர் ஜோதிமுத்து தலைமையில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளிலும் மனு கொடுத்தனர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான்கென்னடி, மாநில துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நத்தம் பகுதியில் மனு கொடுத்தனர். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் நாகேந்திரன் தலைமையில் நிலக்கோட்டை பகுதியிலும், துணை அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஆத்தூர் பகுதியிலும், தெற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ரெட்டியார்சத்்திரம் பகுதியிலும் மனு கொடுத்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.