தஞ்சை அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் செல்போன்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தஞ்சை அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1½ ்லட்சம் மதிப்புடைய செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-12-15 04:16 GMT
கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள வல்லம் கடைவீதி திருச்சி செல்லும் சாலையில் செல்போன் கடை உள்ளது. நேற்று காலை இந்த கடையை திறப்பதற்காக அதன் உரிமையாளர் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடைக்கு சென்றார்.

அப்போது செல்போன் கடையின் முன்புறம் 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் உட்பட பல பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் ஷட்டர் கதவில் போடப்பட்டிருந்த 2 பூட்டுகளையும் உடைத்து உள்ளே புகுந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் ரூ.3,750-ஐ கொள்ளையடித்து சென்றது ெதரியவந்தது.

வலைவீச்சு

இதையடுத்து தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடந்தது. கடையில் மோப்ப நாய் மூலமாக துப்பு துலக்கப்பட்டது.

செல்போன் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்திருந்ததால் வேலை செய்யாமல் இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்