கடலூர் சில்வர் பீச்சில் குவிந்த மக்கள் கடைகளை திறக்க தடை விதித்ததால் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
கடலூர் சில்வர் பீச்சுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதையொட்டி நேற்று பீச்சில் பொதுமக்கள் குவிந்தனர். கடைகளை திறக்க போலீசார் தடைவிதித்ததால் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பாகவே கொரோனா அச்சுறுத்தலால் கடற்கரை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா மூடப்பட்டது. மேலும் கடலூர் சில்வர் பீச்சும் மூடப்பட்டது. இவை இரண்டும் கடலூர் நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதால், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வேறுவழியின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
கடற்கரைக்கு செல்ல அனுமதி
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14.12.2020 (அதாவது நேற்று) முதல் கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் வசதிக்காக சில்வர் பீச்சில் குவிந்து கிடந்த குப்பைகள் அனைத்தும் அள்ளப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டது.
பின்னர் 9 மாதங்களுக்கு பிறகு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டதையொட்டி, நேற்று காலை பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்ல தொடங்கினர். ஆனால் காலையில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
சிறுவர்கள் ஏமாற்றம்
இதற்கிடையே சில்வர் பீச்சில் தள்ளுவண்டியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் நேற்று காலை தங்களது கடைகளை திறக்க வந்தனர். அப்போது அங்கிருந்து போலீசார் கடைகளை திறக்க அனுமதி கிடையாது என்று கூறி, அவர்களை தடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதி அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பொதுமக்கள் கடலூர் சில்வர் பீச்சில் குவிந்தனர். பின்னர் அவர்கள் 9 மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரையை ரசித்தனர். ஆனால் கடற்கரையோரத்தில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து வீணாகி கிடப்பதாலும், கடந்த வாரம் பெய்த கன மழையால் விளையாட்டு உபகரணங்களை சுற்றிலும் மழைநீர் தேங்கி குட்டை போல் கிடப்பதாலும் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.