கல்வி, வேலைவாய்ப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் கோவை நாடார் சங்க கூட்டத்தில் தீர்மானம்

நாடார் சமுதாயத்தினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோவை நாடார் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-12-15 01:23 GMT
கோவை,

கோவை நாடார் சங்கம் மற்றும் டிரஸ்ட் ஆகியவற்றின் பொதுக்குழு கூட்டம் சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஏ.எஸ்.டேவிட், செயலாளர்கள் ஆர்.அன்புராஜ், பொன்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஜி.இருதய ராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

15 சதவீத இடஒதுக்கீடு

தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நாடார் சமுதாயத்தினர் சுமார் 1½ கோடி பேர் உள்ளனர். அம்பா சங்கர் கமிஷன் அடிப்படையில் தமிழகத்தில் நாடார் சமுதாயத்தினர் 2-வது இடத்தில் உள்ளனர். எனவே நாடார் சமுதாயத்தினருக்கு மக்கள் தொகை மற்றும் சமூக நீதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடார் சமுதாய மக்களை பின் தங்கிய வகுப்பினர் பட்டியில் இருந்து மிகவும் பின் தங்கியோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

பனை, தென்னைமரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய தனி வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். கொரோனா காரணமாக வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஆகவே வங்கியில் வாங்கிய கடனுக்கு மேலும் 1 ஆண்டு கால அவகாசம் வழங்கவும், சிறுவணிகர்களுக்கு புதிதாக குறைந்தப்பட்சம் ரூ.1 லட்சமாவது வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

இரவுநேர ரெயில்

கோவை மாவட்டத்தில் குண்டும், குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து முக்கிய சாலைகளுக்கு இறங்கவும், மறுமார்க்கமாக ஏறவும் இறங்குதளம், ஏறுதளம் அமைக்க வேண்டும். சுங்கம் ரவுண்டானாவில் இருந்து கிழக்கு நோக்கி செல்ல மேம்பாலத்தில் ஏறுதளம் அமைக்க வேண்டும். கோவை- திருச்செந்தூருக்கு பொள்ளாச்சி, உடுமலை மார்க்கமாக இரவுநேர விரைவு ரெயில் விட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக பொருளாளர் ஆர்.எஸ்.கணேசன் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் பொன்.செல்வராஜ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்