கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கரைகண்டேஸ்வரர் கோவில் தனுர்மாத விழாவிற்கு பக்தர்கள் வர வேண்டாம்; கலெக்டர் அறிவுறுத்தல்
கலசப்பாக்கம் அருகில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோவில் தனுர்மாத உற்சவம் விழா நடைபெறும் நிலையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் வர வேண்டாம் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
கரைகண்டீஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி இது தொடர்பாக வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலசப்பாக்கம் தாலுகா கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் கரைகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை முதன்மையாக கொண்டு சதுர்வேத நாராயண பெருமாள் கோவில் (கோயில்மாதிமங்கலம்), பச்சையம்மன் கோவில் (பர்வதமலை அடிவாரம்), வீரபத்ரசாமி கோவில் (பர்வதமலை அடிவாரம்), வனதுர்கை அம்மன் கோவில் (பர்வதமலை அடிவாரம்), மல்லிகார்ஜூனசாமி கோவில் (பர்வதமலை உச்சி) ஆகிய உபகோவில்கள் உள்ளன.
கிரிவலம் வழியாக வீதி உலா
கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள கரைகண்டேஸ்வரப் கோவிலில் தனுர்மாத உற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு தொடங்கி யாகங்கள், அனைத்து சன்னதி சுவாமிகள், உற்சவ மூர்த்திகள் அனைத்திற்கும் அபிஷேக, ஆராதனைகள் முடிக்கப்பட்டு தனுர்மாத உற்சவ நாளான நாளை பிற்பகலில் உற்சவ மூர்த்திகள் பர்வதமலை கிரிவலம் வழியாக வீதி உலா வருவார்கள். பர்வதமலையை சுற்றியுள்ள 12 ஊர்களின் வழியாக உற்சவம் நடைபெற்று, இறுதியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பிற்பகலில் கோவிலை உற்சவ மூர்த்திகள் வந்தடைவார்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31-ந் தேதி வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வர வேண்டாம்
கொரோனா காரணமாக இந்த ஆண்டு கரைகண்டேஸ்வரர் கோவில் தனுர்மாத உற்சவம் கோவில் வளாத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் திருவிழாவின்போது ஆண்டுதோறும் நடைபெற்று வந்த அன்னதானம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கை என இதர நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறாது.
கொரோனா நோய் தொற்று பரவாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு கரைகண்டேஸ்வரர் கோவில் தனுர்மாத உற்சவ விழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டு கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்று பரவாமல் பொது மக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.