குமரியில் 11 மையங்களில் போலீஸ் தேர்வை 15,876 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
குமரி மாவட்டத்தில் 11 மையங்களில் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற போலீஸ் தேர்வை 15 ஆயிரத்து 876 பேர் எழுதினார்கள். இதை போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர் (ஆண், பெண்), சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வு நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 17 ஆயிரத்து 861 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதன்படி நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் சன்நகர் அமிர்தா தொழில்நுட்பம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. தொழில்நுட்ப கல்லூரி, நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி, நாவல்காடு ஜேம்ஸ்நகர் ஜேம்ஸ் தொழில்நுட்பம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி, முப்பந்தல் திருராஜபுரம் ஜெயமாதா என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை லயோலா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, செண்பகராமன்புதூர் மொகல்ஸ் கார்டனில் உள்ள எம்.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரி, குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர்கல்வி நிலையம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி, நாகர்கோவில் பார்வதிபுரம் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி என மொத்தம் 11 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. இதில் 15 ஆயிரத்து 876 பேர் கலந்து கொண்டு போலீஸ் தேர்வை எழுதினர். விண்ணப்பித்து இருந்த 1,985 பேர் தேர்வு எழுத வரவில்லை.
டி.ஐ.ஜி. ஆய்வு
குமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களுக்கு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதே போல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனும் ஒவ்வொரு மையங்களாக சென்று ஆய்வு நடத்தினார்.
இந்த தேர்வில் கடும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வுக்கூட அனுமதி சீட்டை கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
செல்போன், கால்குலேட்டர் மற்ற பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் போன்றவை தேர்வு எழுதும் அறைக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வர்கள் கருப்பு அல்லது நீலநிற பால்பாயிண்ட் பேனா கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. பென்சில் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. நாகர்கோவில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி தேர்வு மையம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கு தேர்வு எழுத காலை 9 மணிக்கே பெண்கள் வந்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனைவரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மயங்கி விழுந்த பெற்றோர்
இதே போல அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக தேர்வு மையம் முன் தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்த பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் தாங்கள் கொண்டு வந்த செல்போனை வெளியே உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வறைக்கு சென்றனர். தேர்வு மையத்துக்கு வெளியே பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர்.
பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுத வந்த 2 பெண்கள் தங்களது பெற்றோருடன் காலை 6 மணிக்கே வந்துவிட்டனர். பின்னர் தேர்வு தொடங்கியதும் பெற்றோர் வெளியே காத்திருந்தனர். அவ்வாறு காத்திருந்த பெற்றோர் திடீரென மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.