ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கியது - அலங்கார செடிகளுக்கு பாதுகாப்பு

ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கியது. இதனால் தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகள் பிளாஸ்டிக் போர்வை மூலம் பாதுகாக்கப்படுகிறது.

Update: 2020-12-13 22:15 GMT
ஊட்டி, 

மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து உறை பனி காலம் நிலவும். நடப்பாண்டில் காலநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டது. பின்னர் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதற்கிடையே மழை ஓய்ந்ததால் தற்போது பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் வெள்ளை நிறத்தில் உறைபனி படர்ந்து இருந்தது. பச்சை புற்கள் மீது உறைபனி போர்வை போர்த்தியது போல் காட்சி அளித்தது.

அதேபோல் குதிரை பந்தய மைதானம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் அதிகாலையில் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருந்தது. தாவரவியல் பூங்காவில் பனி தாக்கம் காரணமாக புல்வெளிகள் கருகாமல் இருக்க அதிகாலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. முகப்பில் உள்ளஅலங்கார செடிகள் பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்படுகிறது.

ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 17.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. வருகிற நாட்களில் உறைபனி தாக்கம் அதிகரித்தால் தேயிலை செடிகள் கருகும் அபாய நிலை ஏற்படும்.

ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த உறைபனி காலத்தை அனுபவித்து வருகின்றனர். உறைபனி தாக்கத்தால் வீடுகளில் தண்ணீர் சூடாவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. கடுங்குளிர் காரணமாக மக்கள் வெது, வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்