15 மையங்களில் நடந்த போலீஸ் தேர்வு - 14 ஆயிரத்து 925 பேர் எழுதினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 மையங்களில் நடந்த போலீஸ் தேர்வை 14 ஆயிரத்து 925 பேர் எழுதினர்.

Update: 2020-12-13 22:00 GMT
திண்டுக்கல்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 16 ஆயிரத்து 514 பேருக்கு தேர்வு எழுத அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வுக்காக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 மணி வரை போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தேர்வு நடந்தது.

முன்னதாக தேர்வு எழுத வந்த அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களின் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. பின்னர் ஹால்டிக்கெட், அடையாள அட்டை ஆகியவை சோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்து வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் நீண்ட நேரம் அவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே முக கவசம் அணியாமல் வந்தவர்கள், அருகில் உள்ள கடைகளில் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டு வந்தனர். அதன் பின்னரே அவர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சமூக இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் தேர்வர்கள் அமர்ந்து தேர்வு எழுத தொடங்கினர்.

மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 621 ஆண்கள், 2 ஆயிரத்து 304 பெண்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 925 பேர் நேற்று தேர்வு எழுதினர். 1,589 பேர் தேர்வு எழுத வரவில்லை. திண்டுக்கல்லில் உள்ள தேர்வு மையங்களை போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, சூப்பிரண்டு ரவளி பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்