வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர தாய்மார்கள் ஆதரவு தர வேண்டும் அமைச்சர் பேச்சு

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர தாய்மார்கள் ஆதரவு தர வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

Update: 2020-12-14 00:59 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன், விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவர் கண்ணன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

பெண்களின் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவருடைய கனவு, லட்சியங்களை தாய்மார்கள் நிறைவேற்ற வேண்டும். உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றால் அதற்கு தாய்மார்கள் மனது வைக்க வேண்டும். தாய்மார்கள் மனது வைத்தால் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம்.

பல்கலைக்கழகம் உதயம்

எனவே இங்கு வந்துள்ள மகளிர் அணியினர் அனைவரும் உங்களுடைய முழு உழைப்பையும் அளியுங்கள். உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். வேறு எந்த இயக்கத்திலும் அது கிடைக்காது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை தந்தவர் ஜெயலலிதா. பெண் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இந்த 10 ஆண்டில் மட்டும் 72 புதிய அறிவியல் கல்லூரிகள், 24 பாலிடெக்னிக்குகள், 4 என்ஜினீயரிங் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் விரைவில் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் உதயமாக இருக்கிறது. இங்கு வந்துள்ள மகளிர் அணியினர் இன்றைய தினத்தில் இருந்தே சிறப்பாக தேர்தல் களப்பணியாற்றுங்கள். எந்த கட்சியும் சாராத புதிய வாக்காளர்களை அணுகி அவர்களை இரட்டை இலை பக்கத்திற்கு கொண்டு வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவர் அலமேலுவேலு, துணை செயலாளர்கள் மலர்விழி, நாகம்மாள், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராஜா, கண்ணன், எசாலம் பன்னீர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், ஜெயலலிதா பேரவை தலைவர் ராமதாஸ், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் கோல்டுசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்