கரூர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வை 5,087 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வை 5,087 பேர் எழுதினர்.
கரூர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், மற்றும் ஜெயில் வார்டன் ஆகிய 10, 906 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. கரூர் மாவட்டத்திலும் 3 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்களுக்கு காலை 8 மணிக்கே தேர்வர்கள் வரத் தொடங்கினர்.
செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனாவை மட்டுமே கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. ஹால் டிக்கெட் இல்லாமல் வந்த தேர்வர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
5,087 பேர் தேர்வு எழுதினர்
அதன்படி தேர்வர்கள் முககவசம் அணிந்தபடி நேற்று தேர்வுக்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமி நாசினி கொடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு மேல்நிலைப்பள்ளி, தளவாபாளையம் குமாரசாமி பொறியில் கல்லூரி, உள்ளிட்ட 3 மையங்களில் தேர்வு நடந்தது.
கரூர் மாவட்டத்தில் 5,607 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 5,087 பேர் மட்டும் வந்து தேர்வு எழுதினர்.
திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆய்வு
570 பேர் தேர்வுக்கு வரவில்லை. மொத்தம் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களை திருச்சி சரக டி.ஜ.ஜி. ஆனிவிஜயா நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது கரூர் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ்ஜெயக்குமார், கரூர் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தேர்வு எழுத வந்தவர் காயம்
கரூரில் உள்ள ஒரு மையத்திற்கு மாயனூர் அருகே உள்ள புணவாசிபட்டியை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் தேர்வு எழுத தனது ேமாட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று சென்றுள்ளது. அதன்மீது மோதாமல் இருக்க சரண்ராஜ் பிரேக் பிடித்துள்ளார். இதி்ல் தவறி விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்துடன் தேர்வு மையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் சரண்ராஜிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதி விட்டு சென்றார்.