சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்க தயாராகும் மணிகள்

சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கும் மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-12-13 22:51 GMT
சிங்கம்புணரியில் காளைகளின் கழுத்தில் கட்டுவதற்காக மணி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
ஜல்லிக்கட்டு போட்டிகள்
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், மஞ்சுவிரட்டு போட்டிகள், மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கம். தை மாதம் நெருங்கி வருவதையொட்டி இப்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். காளைகளை அடக்கும் காளையர்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை அலங்கரிக்க வித, விதமான மணிகளை அதன் கழுத்தில் கட்டுவார்கள். தற்போது காளைகளின் கழுத்தில் கட்டப்படும் மணிகள் தயாரிக்கும் பணி சிங்கம்புணரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பாலு என்பவர் கூறியதாவது:-

மணிகள் தயாரிக்கும் பணி
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் கழுத்தில் இருந்து ஜல், ஜல் என்ற ஓசையுடன் மணி ஒலிக்கும். இதற்காகவே சிங்கம்புணரி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மணிகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விலகியதையடுத்து கடந்தாண்டு இங்கு தயாரிக்கப்பட்ட மணிகள் அதிகளவில் விற்பனையானது. பொதுவாக இங்கு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளின் வழிபாட்டிற்காகவும், போட்டியின் போது அந்த காளைகள் பாய்ந்து செல்லும் போது கழுத்தில் கட்டப்பட்ட இந்த மணிகளின் இடையே ஏற்படும் ஒலியால் அந்த காளைகள் இன்னும் அதிவேகமாக செல்லும் என்பதால் காளை வளர்ப்பவர்கள் இந்த மணிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இங்கு கும்பகோண ஆக்க மணி, மணப்பாறை சாதா மணி, அரியக்குடி மணி உள்ளிட்ட பல்வேறு வகையான மணிகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த மணிகள் பெரும்பாலும் காரைக்குடி, அரியக்குடி, துவரங்குறிச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்டு பெரிய காளைகளுக்கு 13 மணிகளும், நடுத்தர காளைகளுக்கு 11 மணிகளும், காளை கன்றுகளுக்கு 9 மற்றும் 6 மணிகள் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்த மணிகளை பெல்ட்டில் வைத்து தைக்கப்பட்ட நிலையில் அதை பார்வையாளர்கள் கவரும் வகையில் பல்வேறு வண்ண கலர் நூல்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்டர்கள் அதிகரிப்பு
இங்கு தயாரிக்கப்படும் இந்த காளைகளின் மணி அதிக ஆண்டு நீடித்து உழைக்கிறது. இதனால் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, வாடிப்பட்டி, தேனி, திண்டுக்கல், உசிலம்பட்டி, அய்யன்பாளையம், மணப்பாறை ஆகிய பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் இங்கு வந்து ஆர்டர்கள் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மேலும் காளைகளுக்கு கால் சலங்கை, மூக்கணாங் கயிறு, நடு வெட்டு கயிறு, அறுந்து போன மணிகளை மீண்டும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் செய்கிறோம். கொரோனா காரணமாக கடந்த 6 மாத காலமாக வேலையின்றி தவித்து வந்தோம். தற்போது ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நெருங்குவதால் காளை உரிமையாளர்களுக்கு பிடித்தமாதிரி மணிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்