கல்லாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி; அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கிவைத்தார்

வாணியம்பாடி நகரின் மையத்தில் ஓடும் பாலாற்றி கிளையாறான கல்லாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2 கோடியில் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கிவைத்தார்.

Update: 2020-12-13 19:45 GMT
வாணியம்பாடி பாலாறு கிளையாற்றில் கழிவுநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கி வைத்தார்
ரூ.2 கோடியில் கால்வாய்
வாணியம்பாடி நகரில் பாலாற்றின் கிளையாறான கல்லாற்றில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனை தடுக்க ஷாகிராபாத் முதல் ஜண்டாமேடு வரை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தார்.

தொடர்ந்து அமைச்சர் நிலோபர்கபில் கூறியதாவது:-

கழிவுநீர் கலக்கிறது
வாணியம்பாடி நகரின் வழியாக செல்லும் பாலாற்றின் கிளையாறான கல்லாற்றில் கழிவுநீர் கலந்து, ஆறு மாசு அடைந்து வருவதை சீர் செய்து கழிவு நீர் கலப்பதை தடுத்திட சிறப்பு நடவடிக்கை எடுக்க தமிழக முதல்-அமைச்சரிடம் கோரப்பட்டது. இதனடிப்படையில் கனிமவள சமூக மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி நிதியை ஒதுக்கினார். இந்த நிதியில் தற்போது கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.

கல்லாறு கொத்தூர் காப்புக்காடு பகுதியின் கிழக்கு சரிவிலிருந்து உருவாகி சுமார் 35 கி.மீ. பயணம் செய்து வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள பாலாற்றில் கலக்கிறது. ஷாகிராபாத் முதல் ஆற்றுமேடு என்ற இடம் வரை கழிவுநீர் கால்வாய் முதற் கட்டமாக 660 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும். தொடர்ந்து நகரின் கடைசி வரை அடுத்த கட்டமாக எஞ்சியுள்ள தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்படும்.

சுத்திகரிப்பு நிலையம்
இறுதியாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு ஆற்றில் விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பணியினை விரைவாக முடித்து கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, வாணியம்பாடி நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம், மாநில திட்ட மதிப்பீட்டு குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுபான் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்