நீர் மேலாண்மைக்கு முதல்-அமைச்சர் முக்கியத்துவம் தருகிறார்; அமைச்சர் கே.சி வீரமணி பேச்சு
கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் நாகநதி ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதிய மேம்பாலத்தை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டு தண்ணீரை மலர்தூவி வரவேற்றார். பின்னர் அவர் பொதுமக்களிடையே பேசுகையில், “நீங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த மேம்பால கனவு தற்போது நனவாகியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மட்டுமல்லாது வியாபாரிகள் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவர். நீர் மேலாண்மைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். குடிமராமத்து திட்டத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. அதனால் தான் இந்தியாவில் தமிழகம் நீர் மேலாண்மையில் முதலிடத்திலும், தமிழகத்தில் வேலூர் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது’ என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம், வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் த.வேலழகன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் எம்.ராகவன், பென்னத்தூர் பேரூராட்சி செயலாளர் பி அருள்நாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெயசீலன், ராதாகிருஷ்ணன், மாணிக்கம், ரவிக்குமார், உமாபதி, கோதண்டன், வி.எல்.ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.