ஓசூர், கிருஷ்ணகிரியில் 3 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.2.41 லட்சம் பறிமுதல்

ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள 3 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-12-13 16:03 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் ஓசூர்-பாகலூர் சாலையில் நல்லூர் செல்லும் வழியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் சோதனைச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த வழியாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் வாகனங்களுக்கு பெர்மிட் வழங்கும் போதும், சோதனையின் போதும் கூடுதல் பணம் வசூலிப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடிக்கு திடீரென சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அங்கு பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன் மற்றும் சுப்புரத்தினம், உதவியாளர் ராமலிங்கம் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டனர். காலை 9 மணி வரை நீடித்த இந்த சோதனை முடிவில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 100 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஓசூர்-பாகலூர் சாலையில் நல்லூர் செல்லும் வழியில் உள்ள சோதனைச்சாவடிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், காலை 9.15 மணியளவில் சென்றனர். அங்கும் அதிரடியாக சோதனை நடத்திய அவர்கள், கணக்கில் வராத ரூ.25 ஆயிரத்து 920 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த சோதனைச்சாவடியில் பணிபுரிந்த அலுவலர்களிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இங்கு சோதனை சுமார் அரை மணி நேரம் நடந்தது.

இந்த 2 சோதனைச்சாவடிகளிலும் சுமார் 5½ மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் போது, கணக்கில் வராத மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டதும், இந்த பணம் மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல் கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் உள்ள காளிக்கோவில் வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரசாத் தலைமையிலான போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.31 ஆயிரத்து 810 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் உள்ள இந்த 3 சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்