தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கோரி கொ.ம.தே.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்பட 100 பேர் கைது

மாரண்டஅள்ளி அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-13 15:51 GMT
பாலக்கோடு, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என கூறினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மாவட்ட தலைவர் நஞ்சப்பன், மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

கைது செய்வதற்கு முன்பு ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்பெண்னை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரி வரை கால்வாய் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் தெரிவித்தார். 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அடிக்கல் நாட்டியதை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சில இடங்களில் நிவாரண பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தார். தற்போது தான் ரஜினி கட்சி ஆரம்பித்துள்ளார். கட்சிக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. கட்சிக்கு பெயர் வைத்து முழுமையான கட்டமைப்புக்கு கொண்டு வரட்டும். புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும் தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. எங்களுடைய கூட்டணி வலுவான கூட்டணி. நிச்சயமாக வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்