மாவட்டம் முழுவதும் 616 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் முழுவதும் 616 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-12-13 15:17 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த மாதம் 16-ந் தேதி வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 605 வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வேலூர் மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 616 மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதில் பொதுமக்கள் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா? என சரிபார்த்து பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் 616 வாக்குச்சாவடிகளிலும் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடந்தது. இதையடுத்து 2-வது கட்டமாக நேற்று மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. பொதுமக்கள் இதற்கான உரிய படிவங்களை வாங்கி சமர்ப்பித்தனர்.

வேலூர் கணியம்பாடி அருகே உள்ள கேவசபுரம், துத்திக்காடு பகுதியில் அரசு பள்ளிகளில் நடைபெற்ற முகாமை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். இந்த முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 5 ஆயிரத்து 512 பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளித்துள்ளனர். அதேபோன்று பெயர் நீக்கம் செய்ய 658 பேரும், திருத்தம் செய்ய 672 பேரும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 496 பேரும் என மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில் மொத்தம் 7 ஆயிரத்து 338 பேர் விண்ணப்பங்கள் வழங்கினர் என்று வேலூர் மாவட்ட தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் வள்ளலாரில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வேணுகோபால் தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வந்திருந்தார். அவரது வாக்காளர் அட்டையில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக ஆதார் அட்டையின் படம் மாறுதலாக பதிவாகி உள்ளது. இதை சரிசெய்ய அவர் பல முறை முயன்றுள்ளார். எனினும் முடியாததால் இந்த முகாமுக்கு வந்தள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்