காட்டு யானை மிதித்து முதியவர் சாவு - 2 வாலிபர்கள் படுகாயம்
கோவை அருகே காட்டுயானை மிதித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
பேரூர்,
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தண்ணீர், உணவுத்தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது மலையடிவார பகுதிகளில் உள்ள தோட்டம், குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று காலை 5.30 மணிக்கு, கோவையை அடுத்த ஓணப்பாளையம் யானைமடுவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, தாளியூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. அங்கு தோட்டங்களில் பயிரிட்டிருந்த சோளம், வாழை உள்ளிட்டவைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானை சாலையில் உலா வந்தது. அப்போது, சாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் யானையை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுபற்றிய தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், காலை 6 மணியளவில் தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள வஞ்சியம்மன் நகருக்குள் காட்டு யானை புகுந்தது. அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் (வயது 75) என்பவர், கடைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் அருகே யானை நின்றுகொண்டிருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில், யானை ஆறுமுகத்தை துதிக்கையால் தாக்கி, காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி (19), முத்து (18) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களையும் காட்டு யானை துரத்தி சென்று தாக்கியது. இதில் 2 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். மேலும் யானையை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் காட்டு யானை அருள்ஜோதி நகர் வழியாக சென்று, முத்திபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்தது. பின்னர் நுழைவு வாயில் கேட் மற்றும் பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தள்ளி சேதப்படுத்தியது. அப்போது காட்டு யானை பிளிறியபடி பொதுமக்களை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அட்டுக்கல் வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்டினர். காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த ஆறுச்சாமி, முத்து ஆகியோருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் குப்பேபாளையம் பகுதியில் புகுந்த காட்டு யானை, பெண் ஒருவரை தாக்கி கொன்றது. அந்த சோகம் முடிவதற்குள் தற்போது முதியவரை காட்டு யானை மிதித்து கொன்றுள்ளது. காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.