வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ரெயில் மறியல் 85 பேர் கைது
வேளாண் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி பூதலூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சை மாவட்டம் பூதலூர் ெரயில் நிலையத்தில் நேற்று காலை ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
காலை 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ெரயில் முன்பு காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அமர்ந்து வேளாண் அவசர சட்டங்களை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
85 பேர் கைது
ரெயில் மறியல் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க தட்சிணாமூர்த்தி, தனபால், தமிழ் தேசிய பேரியக்க பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ெரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க., அ.ம.மு.க.,, காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 85 பேரை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்.
வழக்குப்பதிவு
ெரயில் மறியல் போராட்ட அறிவிப்பை அடுத்து பூதலூர் ெரயில் நிலையத்தில் ெரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஸ்ரீதேவி, விஜயலட்சுமி மற்றும் ஏராளமான போலீசார் பூதலூர் ெரயில் நிலையத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை செய்தனர்.
ரெயில் மறியல் போராட்டம் காரணமாக சோழன் விரைவு ெரயில் 15 நிமிடம் தாமதமாக பூதலூர் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. ரெயில் மறியலில் ஈடுபட்ட 85 பேர் மீது பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.