புதிய இளம் வாக்காளர்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க ஆர்வமுடன் உள்ளனர் அமைச்சர் காமராஜ் பேட்டி
புதிய இளம் வாக்காளர்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க ஆர்வமுடன் உள்ளனர் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
தமிழகத்தில் 2-வது கட்டமாக வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத புதிய இளம் வாக்காளர்களை கண்டறிந்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசியல் கட்சியினர் செய்து வருகின்றனர். அந்த வகையில் வாக்காளர் சேர்க்கை தொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகளின் பணிகளை கட்சியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
திருவாரூர் கோபால்சாமி தெரு மற்றும் புதுத்தெருவில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் உள்ள பகுதிகளுக்கு அமைச்சர் காமராஜ் நேரில் சென்று அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து புதிய வாக்காளர் சேர்க்கை பணிகள் குறித்து கேட்டறிந்தார். அனைத்து புதிய வாக்காளர்களையும் விடுதல் இன்றி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான உதவிகளை நிர்வாகிகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் முகாமில் விடுதல் இன்றி அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர் என்கின்ற அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன்.
ஆர்வத்துடன் இளம் வாக்காளர்கள்
புதிய இளம் வாக்காளர்களை பொறுத்தவரை ஆர்வத்துடன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து வருகின்றனர். தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட புதிய இளம் வாக்காளர்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கும் ஆர்வத்துடன் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேவையான உரம்
இதுவரை 90,623 எக்டேர் பரப்பிலான சம்பா நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படும். மேலும் பயிர் காப்பீட்டு தொகையும் பெற்று தரப்படும். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 3,413 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புகள் முடிந்தபிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும். தற்போது மழையால் ஓரளவு பாதிக்கப்பட்டு தண்ணீர் வடிந்துள்ள வயல்களில் பயிர்களை காப்பாற்ற தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்து இருப்பில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதில் நகர செயலாளர் மூர்த்தி, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கலியபெருமாள், நிர்வாகி ரெயில் பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.
மன்னார்குடி
இதேபோல் மன்னார்குடியில் உள்ள தூயவளனார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னார்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் காசிநாதன் தலைமையில் தி.மு.க.வினர் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதில் முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் தமிழ்செல்வம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்களிடம் பெயர் சேர்ப்பது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார். வாக்காளர்களிடம் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார். ஆய்வின் போது கூத்தாநல்லூர் நகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், மேலாளர் லதா, அ.தி.மு.க.நகர செயலாளர் பசீர் அகமது, துணை செயலாளர் உதயகுமார், பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.