அரியலூரில் பரபரப்பு: செல்போன் கோபுரத்தின் உச்சியில் நின்று வாலிபர் போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரியலூரில் செல்போன் கோபுர உச்சியில் நின்று வாலிபர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர்,
அரியலூர் தெற்குத்தெருவில் அய்யப்பநாயக்கன் ஏரிக்கு அருகில் உள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுர உச்சியில் நேற்று மதியம் 3 மணிக்கு வாலிபர் ஒருவர் நின்று, கூக்குரல் எழுப்பியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு வரத்தொடங்கினர். பொதுமக்கள் செல்போன் கோபுர உச்சியில் பார்த்தபோது, அங்கு கோசிநகரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(வயது 30) நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உறவினர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசியபோது, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, செல்போன் கோபுர உச்சியில் நின்று போராடுவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த அரியலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், விக்கியிடம் கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் விக்கி, இறங்க மறுத்து செல்போன் கோபுரத்தின் உச்சியில் காலை மடக்கி அமர்ந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்
பின்னர் விக்கியின் தந்தை ரவியை அழைத்த போலீசார், அவரை செல்போனில் விக்கியிடம் பேசச்சொல்லி, அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து செல்போன் கோபுர உச்சிக்கு சென்ற அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், விக்கியை சமாதானப்படுத்தி அவரை கீழே அழைத்து வந்தார்.
இது குறித்து விக்கி கூறுகையில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், நெல்லின் அவசியத்தை முதல்-அமைச்சர் அறிந்து போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும், என்றும் கூறினார். பின்னர் அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அண்ணனும் போராட்டம்
இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் அருகே கோசி நகரை சேர்ந்த வீரமணி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனி ஆளாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். வீரமணி, செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய விக்கியின் அண்ணன் ஆவார்.