குமரியில் 1,694 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; பார்வையாளர் ஜோதி நிர்மலாசாமி ஆய்வு

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,694 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜோதி நிர்மலா சாமி ஆய்வு செய்தார்.

Update: 2020-12-12 21:40 GMT
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடந்த சிறப்பு முகாமில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு நடத்திய போது
வரைவு வாக்காளர் பட்டியல்
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இதே போல குமரி மாவட்டத்தில் வரைவு வாக் காளர் பட்டியலை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார். அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 20 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 148 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 57 ஆயிரத்து 598 பெண் வாக்காளர்களும், 189 இதர வாக்காளர்களும் அடங்குவர்.

இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கவும், திருத்தம், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 1-1-2021 அன்றுடன் 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடந்தது.

சிறப்பு முகாம்
இந்த நிலையில் 2-ம் கட்ட சிறப்பு முகாம் 1,694 மையங்களில் நேற்று நடந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் தலைமையில் புதிய வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்குச்சாவடிகளிலும் ஏராளமான வாலிபர்களும், இளம்பெண்களும் வந்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.

மேலும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், வேறு தொகுதிக்கு பெயரை மாற்றம் செய்யவும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்யவும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

பார்வையாளர் ஆய்வு
இந்த பணி நடந்த முகாம்களில் ஒன்றான கார்மல் பள்ளியில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனருமான ஜோதி நிர்மலா சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக் டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜோதி நிர்மலா சாமி பேசியபோது கூறியதாவது:-

பட்டியலில் சேர்க்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் அதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை முன்கூட்டியே பார்க்க வேண்டும். அப்போது பட்டியலில் பெயர் இல்லை என்பது தெரியவந்தால் உடனே பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தகுதியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக்கூடாது. குமரி மாவட்ட மக்கள் தொகையை கணக்கிட்டு பார்த்ததில் 18 வயது நிரம்பிய பெரும்பாலானோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தங்களது பெயரை உடனே பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பங்களை அரசியல் கட்சி பிரமுகர்களிடம் மொத்தமாக வழங்க முடியாது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தலுக்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தங்களது பகுதியில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் உடனே அவர்களை முகாம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர்
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், வருவாய் அதிகாரி ரேவதி, சப்-கலெக்டர் சரண்யா அரி, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தேர்தல் தாசில்தார் சேகர், அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால், தி.மு.க.வை சேர்ந்த லீனஸ்ராஜ், பா.ஜனதாவை சேர்ந்த ஜெகதீசன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு இசக்கிமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்