அரசியல் கட்சி தொண்டர்கள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்; 80-வது பிறந்த நாள் விழாவில் சரத்பவார் பேச்சு
அரசியல் கட்சி தொண்டர்கள் தங்களது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என சரத்பவார் தனது 80-வது பிறந்த நாள் விழாவில் கூறியுள்ளார்.
பிறந்த நாள்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார். இவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய வேளாண் துறை மந்திரியாக பதவி வகித்ததுடன், மராட்டிய முதல்-மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இவர் நேற்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளையொட்டி மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த விழாவில் சரத்பவார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தங்களது கொள்கையில் உறுதியாக இருப்பது அரசியல் கட்சி தொண்டர்களுக்கு முக்கியமானதாகும். புதிய தலைமுறை அரசியல் தொண்டர்கள் மகாத்மா ஜோதிபா புலே, அம்பேத்கர், சத்ரபதி சாகு மகாராஜ் ஆகியோரின் சித்தாந்தகளை நினைத்து பாா்க்க வேண்டும்.
வழியை பின்பற்ற வேண்டும்
நீங்கள் சமூகத்தின் கடைசி நபரின் தேவையில் கவனம் செலுத்தும் போது, அந்த பாதை எங்கு செல்கிறது என்பதில் தெளிவு இருக்க அதிகம் கற்று கொள்ள வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக பொதுப்பணியில் ஈடுபட மக் கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். புலே, சாகுமகாராஜ், அம்பேத்கரை நினைத்தால் மட்டும் போதாது. அவர்களின் வழியையும் பின்பற்றுவது முக்கியமாகும்.
சமூக பணியில் ஈடுபடும் போது குடும்ப பொறுப்புகளையும் புறக்கணிக்க கூடாது என்பதை எனது பெற்றோர் எனக்கு கற்று கொடுத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.