மின்சாரம் பாய்ந்து பலியான ஊழியர் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு மறியல்
கொடைரோடு அருகே உள்ள பொட்டிசெட்டிபட்டி காந்திநகரை சேர்ந்தவர் ராஜா (வயது 31). இவர், பள்ளபட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர், குல்லலக்குண்டுவில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராஜாவின் உடல், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே அவருடைய உடலை வாங்க மறுத்து ராஜாவின் உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவையினர் நிலக்கோட்டை நால்ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மறியலால் மதுரை-பெரியகுளம், திண்டுக்கல்-நிலக்கோட்டை, அணைப்பட்டி-நிலக்கோட்டை சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ஆர்.டி.ஓ.உஷா, நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.