கலப்பு மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டத்தில் 600 தனியார் மருத்துவமனைகள் மூடல்
மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருகபவனம்,
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மருத்துவக்கல்வி, பொது சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றை இணைத்து ‘நவீன மருத்துவம் ஆயுஷ்’ என்ற கலப்பு மருத்துவ முறையை மத்திய அரசு வருகிற 2030-ம் ஆண்டு கொண்டுவர முயற்சித்து வருகிறது. இந்த கலப்பு மருத்துவ முறை அமல்படுத்தப்பட்டால் அலோபதி டாக்டர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி வருங்காலங்களில் ஆயுர்வேத டாக்டர்களும் செய்யலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 600 தனியார் மருத்துவமனைகள் நேற்று மூடப்பட்டன. ஆனாலும் அவசர கால சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்று தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொது சுகாதார துறை பிரிவு மாநில செயலாளர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் டாக்டர்கள் அனைவரும் ‘கருப்பு பேட்ஜ்’ அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் செந்தில்குமரன், மாவட்ட இணை செயலாளர் கார்த்திகேயன், உறுப்பினர்கள் சந்திரமவுளி, டீன்வெஸ்லி உள்பட பலர் கலந்துகொண்டனர். வத்தலக்குண்டுவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க வத்தலக்குண்டு கிளை தலைவர் டாக்டர் நந்தகோபால் சாமி தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் சண்முகவடிவு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக டாக்டர்கள் கோஷமிட்டனர்.