வத்திராயிருப்பில் பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து விவசாய பணிக்கு செல்லும் விவசாயிகள்

வத்திராயிருப்பில் பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து விவசாயிகள் தங்களது பணிக்கு செல்கின்றனர்.

Update: 2020-12-12 00:36 GMT
வத்திராயிருப்புவில் அர்ச்சுனா நதியை கடந்து செல்லும் விவசாயிகள்
தொடர்மழை
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆதலால் பாசனத்திற்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்மழையினால் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பெரியகுளம், வீராகசமுத்திரம் உள்ளிட்ட 12 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மாவட்டத்தின் முக்கிய மிகப்பெரிய அணையான பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும்.

பாலம் இல்லை
தற்போது பெரியகுளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் தண்ணீர் வத்திராயிருப்பு - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள அர்ச்சுனா நதி வழியாக செல்கிறது.

அர்ச்சுனா நதி என்ற ஆற்றில் பாலம் இல்லை. ஆதலால் வத்திராயிருப்பில் உள்ள விவசாயிகள் வில்வராயன் கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் வயல்களுக்கு இந்த ஆற்றை கடந்து தான் செல்கின்றனர்.

மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் அவர்கள் வேறு வழியின்றி தண்ணீருக்குள் பயத்துடன் நடந்து சென்று தான் தங்களது பணிகளை தொடருகின்றனர்.

உரமிடுதல்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

அர்ச்சுனா நதியை கடந்து தான் நாங்கள் வில்வராயன் கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் வயல்களுக்கு செல்கிறோம். ஆற்றை கடந்து செல்ல பாலம் வசதி இல்லை. ஆதலால் தண்ணீரில் நடந்து சென்று தான் நெற்பயிர்களுக்கு உரமிடுதல், களை பறித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் சமயங்களில் சற்று பயத்துடன் தான் ஆற்றை கடக்க வேண்டியுள்ளது.

எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றை எளிதில் கடந்து செல்லும் வகையில் உடனடியாக பாலம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்