7.5 சதவீத இட ஒதுக்கீட்டினால், விருதுநகர் மாவட்டத்தில் 11 ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு; முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 11 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
வாய்ப்பு
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தமிழக அரசு செய்து தந்தது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 405 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 11 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் அனைவருமே கிராமத்தை சேர்ந்தவர்கள்.
11 பேர்
விருதுநகர் மாவட்டத்தில் கீழராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த சவுமியா, நடயநெரியை சேர்நத அபர்ணா, அம்மாபட்டியை சேர்ந்த சுபாஷ் பிரபாகரன், திருத்தங்கலை சேர்ந்த கல்பனா, ராமச்சந்திரா புரத்தை சேர்ந்த மஞ்சு தேவி, முத்துராமலிங்க புரத்தை சேர்ந்த கார்த்திகேயன், நல்லமநாயக்கன்பட்டி சேர்ந்த ராமதிலகம், ரெட்டியபட்டியை சேர்ந்த பிரவீன் குமார், மல்லாங்கிணறை சேர்ந்த பிரபா, மேல தாயில்பட்டியை சேர்ந்த பிரகாஷ், ராஜபாளையத்தை சேர்ந்த திவ்யலட்சுமி ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த ஏற்பாடு செய்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்த இம்மாவட்டத்தை சேர்ந்த 11 பேருமே கிராமப்புறத்தை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் ஆவர்.
நன்றி
அனைவரும் தாங்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் கல்வி கட்டணத்தை அரசே செலுத்திட வாய்ப்பு கிடைத்துள்ளதாக நன்றியுடன் தெரிவித்தனர்.